
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் தமிழக முதல்வர் சார்பில் மீனவர் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கடிதங்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் சம்பவமாக இன்று அதிகாலையிலேயே ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது சுற்றிவளைத்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மூன்று பேரை படகுடன் சிறை பிடித்து அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்கரை முகாமிற்கு மீனவர்கள் மூவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் தமிழக மாணவர் மீனவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.