மறைந்த ஜெ, சிறையில் உள்ள சசிகலாவுக்கு, தற்போது துணை முதல்வர் ஓ.பி.எஸ் மூலமாக அறிமுகமானவர் வேலூரை சேர்ந்த மணல் விற்பனை தொழில் செய்யும் தொழிலதிபர் சேகர்ரெட்டி. பண மதிப்பிழப்பின்போது இவரது வீட்டில் சுமார் 300 கோடி ரூபாய் புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களாக கைப்பற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, திருப்பதி – திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக ( தமிழகம் சார்பில் ) இருந்தார். கைதால் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அந்த பணம்மெல்லாம் “நியாயமான“ முறையில் சம்பாதித்தது என சான்றளிக்கப்பட்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் சேகர்ரெட்டி.
இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள தேவஸ்தான தலைவரும், முதல்வரின் சித்தப்பாவுமான ஒய்.வி.சுப்பாரெட்டியை கடந்த மாதம் திருமலையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு 1 மணி நேரம் உரையாடியுள்ளார்.
இதுப்பற்றி தேவஸ்தான வட்டாரங்களில் விசாரித்தபோது, இன்னும் அறங்காவலர் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தின் சார்பில் ஒருவர் நியமிக்கப்படுவர். அந்த ஒருவராக என்னை நியமனம் செய்ய பரிந்துரை வரும் அதன்படி என்னை நியமியுங்கள் எனக்கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
அதோடு, புதிய தலைநகரம் உருவாக்கும் வேலைகளின் பல சப்காண்ட்ரக்ட்களை தமிழகத்தை சேர்ந்த சில கம்பெனிகள் எடுத்துள்ளன. தனது நிறுவனத்துக்கும் வேலைகள் வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளதாக தெரிகிறது என்கிறார்கள்.
பல சர்ச்சைகளில் சிக்கிய சேகர்ரெட்டி, மீண்டும் தனது அதிகாரத்தை அதிமுக அமைச்சர்களிடம் காட்டிவருகிறார் என்கிற குற்றச்சாட்டை அமைச்சர்கள் தரப்பிலேயே சொல்லப்படுகிறது. இதுப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டுக்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் சார்பில் திருப்பதிதிருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமனம் செய்யப்படும் உறுப்பினராக மீண்டும் சேகர்ரெட்டியா என கேள்வி எழும்பியுள்ளது. இதுப்பற்றி தொழிலதிபர் சேகர்ரெட்டியின் கருத்தறிய தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் எண் சுச் ஆப் செய்யப்பட்டுயிருந்தது. அவருக்கு நாம் அனுப்பிய எஸ்.எம்.எஸ் க்கு பதிலில்லை.