தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய் நிவாரணம் பொருட்களை வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடிகர் விஜய் விளக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதே சமயம் நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்காதது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜய்யால் களத்தில் நிற்க முடியாது. பிரச்சினை இருக்கிறது. அவர் களத்திற்கு போனால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்துவிடும். அந்த பிரச்சினையை வேறு சமாளிக்க வேண்டும். விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே. அதை பாராட்ட வேண்டும்” என்றார்.