விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன் வந்து அமைத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் கூறிய பின்பும் தமிழக அரசு பரிந்துரையை ஆளுநர் இதுவரை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது அதிர்ச்சியளிக்கிறது, ஆகவே இதை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். இவ்விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததால் தான் பெட்ரோல், டீசல் விலை மாதத்துக்கு இரண்டு முறை உயர்கிறது. இதை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
ஹெச்.ராஜா போன்றவர்கள் தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் மிக மோசமாக விமர்சிக்கிறார். பலரும் பலவிதமாக மேடைகளில் பேசுகின்றனர். இது ஜாதி, மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. இவர்கள் பேசுவது அரசுக்கும், காவல்துறைக்கும் ஒரு சவாலாக உள்ளது. ஆகவே ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தமிழக அரசு மீதான நம்பகத்தன்மை போய்விடும்’’ என்றார்.
மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி பயங்கரவாதத்தை எதிர்த்து திருச்சியில் 'தேசம் காப்போம்' என்று மாநாடு நடத்த உள்ளோம். அம்மாநாட்டிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.