ஆத்தூர் அருகே, விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள செங்காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விவசாயி. இவருடைய மகன் தினேஷ் (16). இவர், ஆத்தூரில் உள்ள எஸ்சி, எஸ்டி நலத்துறை விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வார விடுமுறைகளில் தினேஷ், வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கம். அதன்படி, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால், விடுதிக் காப்பாளரிடம் விடுப்புக் கடிதத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, வெள்ளிக்கிழமை (மார்ச் 25) மாலையே கிளம்பிச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் மீண்டும் விடுதிக்கு திரும்பினார்.
ஆனால் மாணவன் தினேஷ் விடுதிக்கு திரும்பியது யாருக்கும் தெரியாது என்கிறார்கள். இந்த நிலையில், திங்களன்று (மார்ச் 28) காலையில், விடுதியின் பின்பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் தினேஷ் சடலமாக தொங்கியது தெரியவந்தது. சடலத்தைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விடுதி காப்பாளருக்கு தகவல் அளித்தனர். ஆத்தூர் காவல்நிலைய காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சடலத்தின் கால்கள் தரையில் மோதியபடி இருந்ததால் அவரை யாராவது கொன்று விட்டு தூக்கில் தொங்க விட்டனரா என்றும் மாணவரின் உறவினர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.
மாணவன் தினேஷின் மரணத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், விடுதி மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.