கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பள்ளிகளுக்கு மாணவர்கள் வாகனங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை இருந்தும் மாணவர்கள் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்வதை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் பல இருந்தாலும் அச்செயல்கள் இன்னும் குறையாததால் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.
கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அவரது மகன் புஷ்பராஜ் அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று தன் உறவினரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரது பள்ளிப் பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது கோவில்பட்டி நெடுஞ்சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். புஷ்பராஜ் பயின்று வந்த பள்ளிக்கு சொந்தமான வாகனம் பின்னால் வந்ததால் கீழே விழுந்த புஷ்பராஜ் பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டார். இதனால் படுகாயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிய வந்துள்ளது. எதிரே வந்த வாகன ஓட்டுநர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் பள்ளி வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.