சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஜூன் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் ஊரடங்கு என்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உள்பட பலர் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியபோதே சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சாரை சாரையாக மக்கள் சென்றனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சென்னையிலேயே இருந்த மக்களுக்கும் வேலைவாய்ப்பு போதிய வருமானம் இல்லாமல் கடும் சிரமத்தில் இருந்தனர்.
தற்போது மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு என்றதும், வருமானம் இல்லாமல் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, மளிகைப் பொருட்கள் வாங்க முடியவில்லை. கஞ்சிக்கே கஷ்டமாக இருக்கிறது என சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். சுங்கச்சாவடியில் எப்படியும் பேசி போய்விடலாம் எனச் சிலர் இ-பாஸ் இல்லாமல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு காரில் வந்தடைந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அனுமதிக்க முடியாது என்றனர். போலீசார் சோதனை செய்வதால் காத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானது. இரண்டு, மூன்று கிலோ மீட்டருக்குத் தாண்டி நின்றது.
இதையடுத்து கட்டணம் வசூலிக்காமலேயே சுங்கச்சாவடி திறந்துவிடப்பட்டது. கார்கள் நிற்காமலேயே பறந்தன. இருசக்கர வாகனங்களில் குடும்பம், குடும்பமாக சொந்த ஊருக்கு மக்கள் செல்கின்றனர். இதனிடையே சென்னையிலிருந்து சிலர் நடந்தே பரனூர் சுங்கச்சாவடியை வந்தடைந்துள்ளனர். விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் நடந்தே இந்த இடத்திற்கு வந்து, போகும் கார், லாரி, பைக்குகளில் தங்களை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்ட காட்சிகளையும் பார்க்க முடிகிறது பரனூர் சுங்கச்சாவடியில்.