சென்னை உயர்நீதிமன்றத்தில் வசந்த குமார் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே இந்த பணியிடங்களை நிரப்ப நேரடி நியமங்களை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாகச் சட்டக்கல்லூரி இயக்குநர் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் அமர்வில் இன்று (07.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது நீதிபதி, “சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களின் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்பும் போது இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பேராசிரியர்கள் தேர்வு தொடர்பான விதிகளை வகுக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நிபுணர் குழுவும் அமைத்து உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.