தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தும் விழாவுக்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை அழைத்திருப்பது தமிழக கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளனர். தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 32- வது பட்டமளிப்பு விழா நாளை (05.03.20220) விமர்சியாக நடக்கவிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் நடக்கும் இவ்விழாவிற்கு தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரும் பங்கேற்கும் இந்த விழாவில், இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். விழாவில் பங்கேற்கும் கஸ்தூரி ரங்கன் பேருரையாற்றவும் இசைந்துள்ளார்.
தமிழக அரசின் பல்கலைக்கழகம் ஒன்று நடத்தும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு கஸ்தூரிரங்கன் பேருரையாற்றுவதையும், அவரை அழைத்த பல்கலைக்கழகத்தின் மீதும் அதிர்ப்தியை வெளிப்படுத்துகிறார்கள் தமிழக கல்வியாளர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர்கள்,‘’ இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக கடந்த 2017-ல், கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது மோடி அரசு. கஸ்தூரி ரங்கனும் மத்திய அரசினின் சிந்தனைகளுக்கேற்ப தேசிய கல்விக் கொள்கைகளுக்கான வரைவு அறிக்கையை தயார் செய்து அதனை கடந்த 2019, ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த அறிக்கை தமிழக கல்வியாளர்களையும் அரசியல் கட்சிகளையும் கொந்தளிக்க வைத்தது.
குறிப்பாக, கூட்டாச்சி தத்துவத்திற்கு கஸ்தூரிரங்கனின் பரிந்துரைகள் வேட்டு வைப்பதாக இருந்தன. மேலும், ஒரே நாடு, ஒரே கல்வி என்கிற தத்துவத்தையும் அந்த அறிக்கை முன் வைக்கிறது. மத்திய- மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் உள்ள பள்ளிக்கல்வியை மாநில நலன்களுக்கு புறம்பாக சித்தரிக்கிறது அந்த வரைவு அறிக்கை. பள்ளிக்கல்வியை மத்திய அரசு பட்டியலுக்கு கடந்த 1976-ல் மாற்றியிருந்தாலும் மாநில அரசுகளின் கல்வி கொள்கையில் மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், மோடி அரசு வந்ததற்கு பிறகு மத்திய அரசின் பட்டியலில் உள்ள பள்ளிக்கல்வியை தங்களது கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறை போலவே நினைக்கத்துவங்கியது. அதற்கு வலுவூட்டுவது போல இருந்தது கஸ்தூரி ரங்கனின் வரைவு அறிக்கை.
கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ராஜாஜி காலத்து குலக் கல்வித் திட்டத்தை மீண்டும் புகுத்தும் நோக்கத்தில், குருகுலம் பாடசாலை போன்ற புராதன கல்வி முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை அந்த வரைவை அறிக்கை அழுத்தமாக பரிந்துரைத்துள்ளது. இதனால் ஜாதி மற்றும் மத ரீதியிலான கல்வி முறைகளே ஓங்கும். அதேபோல, ஆரம்ப கல்வி என்பது உலக முழுவதும் 5-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடமிருந்துதான் துவங்க வேண்டும் என இருக்கிறது. ஆனால், கஸ்தூரி ரங்கனின் அறிக்கையோ 3- வயதிலிருந்தே துவங்கலாம் என்கிறது.
பல்கலைக்கழகங்களை மூன்று வகையாகப் பிரித்து, அதிக ஆய்வுகளையும் குறைச்சலான பாடங்களையும் வைத்திருப்பதை முதல் வகை எனவும், குறைந்த ஆய்வுகளையும் அதிகமான பாடங்களையும் கொண்டதை இரண்டாவது வகை எனவும், பட்டங்கள் வழங்கக்கூடிய அதிகாரங்களை மட்டுமே வைத்திருக்கும் வகையில் மூன்றாவது வகை எனவும் பிரிக்க வலியுறுத்துகிறது அந்த அறிக்கை. பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்படிப்பட்ட பரிந்துரைகளை செய்திருக்கிறது கஸ்தூரி ரங்கன் குழு. அந்த குழுவின் வரைவு அறிக்கை பெரும்பாலும் மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராகவும், அடித்தட்டு மக்களின் கல்வி உரிமைகளை பறிக்கும் வகையிலும் இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையில் பல ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியது கஸ்தூரி ரங்கனின் வரைவு அறிக்கை. இதற்கு தமிழக அரசும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது.
இப்படியிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வியில் மாநில அரசின் அதிகாரங்களை ஒட்டுமொத்தமாக புறம்தள்ளும் வகையில் அறிக்கை சமர்பித்துள்ள கஸ்தூரி ரங்கனை பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்திருப்பது கண்டனத்திற்கு உரியது. மாநில அரசுக்கு எதிரான சிந்தனையில் உள்ள அவரை மருத்துவ பல்கலைக்கழகம் எப்படி அழைத்தது? எதற்காக அழைக்க வேண்டும்? பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு தமிழக முதல்வருக்குத் தெரியுமா? தேசிய கல்விக் கொள்கைக்கு அரசு, அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேசிய கல்விக் கொள்கையை வரையறை செய்த கஸ்தூரிரங்கனை கல்லூரி மாணவ- மாணவிகள் மத்தியில் பேருரை நிகழ்த்தச் சொல்வது மிக கண்டனத்திற்குரியது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். முதல்வர் எடப்பாடிக்கு சென்றதா? என தெரியவில்லை ‘’என கொந்தளிக்கிறார்கள் கல்வியாளர்கள்.