Skip to main content

டெங்கு காய்ச்சல் பாதிப்பு; மருத்துவத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 07/11/2024 | Edited on 07/11/2024
Dengue fever Important information released by the medical department

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் இணைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அடிக்கடி பரவும் நோய்கள் குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் தவிர்க்க முடியாத நீர்த் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் டெங்கு பாதிப்பு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.

ஜனவரி 2024 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவச் சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும். டெங்கு பரவுவதைத் தடுக்கவும், டெங்கு தொடர்பான இறப்புகளை மேலும் குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளால் டெங்கு இறப்பு விதிதம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு 30 ஆயிரத்து 425 பேரும், 2023 ஆம் ஆண்டு 29 ஆயிரத்து 401 பேரும், இந்த ஆண்டில் கடந்த 5ஆம் தேதி (05.11.2024) வரை 20 ஆயிரத்து 138 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் டெங்கு பாதிப்பைக் கண்காணிப்பதில் அரசு விழிப்புடன் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்