சேலம் உருக்காலையை தனியார் ஒப்பந்தம் எடுப்பதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை இரண்டாம் முறையாக மீண்டும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து செயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் உருக்காலை, கடந்த 1981ம் ஆண்டு உற்பத்தியைத் துவக்கியது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு 32 ஆயிரம் டன்னாக இருந்த இந்த ஆலையின் உற்பத்தித்திறன், காலப்போக்கில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன் சுருள்கள் உற்பத்தித்திறனில் ஆண்டுக்கு 3.60 லட்சம் டன் அளவுக்கு விரிவாக்கம் பெற்றது. இந்த ஆலையில் இருந்து 37 நாடுகளுக்கு ஸ்டீல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.
இந்நிலையில், ஆலை விரிவாக்கத்திற்காக வெளியில் இருந்து 2300 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. புதிய ஆர்டர்கள் இல்லாதது, மூலப்பொருள்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சாக்குபோக்குகளைக் காரணம் காட்டி, ஆலை நட்டத்தில் இயங்குவதாக செயில் அறிவித்தது. அதனால், இந்த ஆலையை தனியாருக்கு விற்றுவிடலாம் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவும் பரிந்துரை செய்தது.
சேலம் உருக்காலை மட்டுமின்றி, விஸ்வேஸ்வரய்யா உருக்காலை (கர்நாடகா), அலாய் ஸ்டீல் ஆலை (துர்காபூர்) ஆகிய பொதுத்துறைக்குச் சொந்தமான ஆலைகளையும் தனியாருக்கு விற்றுவிட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதையடுத்து, செயில் நிர்வாகம் இம்மூன்று ஆலைகளையும் தனியாருக்கு விற்று விடும் பணிகளில் முழு வீச்சில் களமிறங்கியது. தனியாருக்கு விற்பதற்கான பகிரங்க அறிவிக்கையை, கடந்த ஜூலை 4ம் தேதி செயில் நிர்வாகம் வெளியிட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசம் அளித்திருந்தது.
செயிலின் முடிவை எதிர்த்து, உருக்காலையில் பணியாற்றி வரும் 950 நிரந்தர தொழிலாளர்களும் ஜூலை 5ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் செயில் தரப்பில் சிறு அசைவும் இல்லாது போகவே, தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை பல்வேறு பரிமாணங்களில் இன்று வரை தொடர்ந்து வருகின்றனர். தர்ணா, உண்ணாவிரதப் போராட்டம், செயிலைக் கண்டித்து ஊர்வலம் என பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து அவர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, உருக்காலையை வாங்குவதற்கு ஒருவரும் முன்வராததால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீட்டித்தது செயில். அப்போதும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சேலம் உருக்காலை மீது பெரிய அளவில் கவனம் செலுத்தாததால், இப்போது இரண்டாம் முறையாக செப்டம்பர் 10ம் தேதி வரை ஒப்பந்தம் எடுப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது செயில். இதற்கு தொழிலாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாம் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சுரேஷ்குமாரிடம் பேசினோம்.
''சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பது குறித்து எப்போது அறிவிப்பு வெளியிட்டார்களோ அதற்கு அடுத்த நாளில் இருந்து போராடி வருகிறோம். ஆலையை வாங்க விருப்பம் உள்ள நிறுவனத்தினர் இங்கே நேரில் பார்வையிட வரலாம் என்பதால், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நுழைவாயில் அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறோம். எங்களைக் கடந்து எந்த ஒரு வெளிநபரும் உள்ளே சென்று விட முடியாது. அதில் உறுதியாக இருக்கிறோம்.
இந்த ஆலையை வாங்குவதற்கு தனியார் முதலாளிகள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆலையை வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் அவகாசத்தை இப்போது இரண்டாவது முறையாக செப்டம்பர் 10 வரை நீட்டித்துள்ளனர். ஒருவேளை, ஆலையின் மதிப்பை மேலும் குறைப்பதற்காகவோ அல்லது மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு விற்பதற்காக அப்படியொரு நாடகத்தை ஆடவும் வாய்ப்பு இருக்கிறது. தொழிலாளர்கள் ஒருபுறம் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவகாசத்தை நீட்டித்து இருப்பது குறித்து ஆலை நிர்வாகம் எங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
நாங்கள் சுழற்சி முறையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் உருக்காலையில் உற்பத்திக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருந்ததில்லை. என்றாலும், சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் போராட்டம் மேலும் வலுவடையும்,'' என்றார் சுரேஷ்குமார்.