சேலத்தில், கலப்பட மற்றும் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக 25 வழக்குகளில் 3.41 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் ஆத்தூர், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் போலி மற்றும் கலப்பட உணவுப் பொருள்கள், செயற்கை நிறமூட்டிகள், செயற்கை சுவையூட்டிகள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பொருள்கள், உண்ணத்தகாத மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3.41 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தரமற்ற உணவுப் பொருள்களை விற்றதாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் 53 ஆயிரம் ரூபாய், தரமற்ற ஜவ்வரிசி விற்றதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 ஆயிரம் ரூபாய், கலப்பட சமையல் எண்ணெய் விற்றதாக 4 வழக்குகளில் 1.26 லட்சம் ரூபாய், கலப்பட பால், பேக்கரி உணவுப் பொருள்களை விற்றதாக 11 வழக்குகளில் 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கலப்பட மற்றும் காலாவதி உணவுப் பொருள்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.