பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பொங்கல் நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியூர்களுக்குச் செல்வார்கள் என்பதால் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் முழு முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் பொது இடங்களில் மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. மாஸ்க் அணியாமல் இருந்தால் 200 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பண்டிகை காலம் என்பதால் விதிமுறைகளை இன்னும் அதிகப்படுத்த இனி பொதுஇடத்தில் மாஸ்க் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியும் போது வாய், மூக்கு முழுமையாக மூடியபடி மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.