தர்மபுரி நகர கூட்டுறவு வங்கியில் கடந்த, 2003-ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் மென்பொருள் ஒப்பந்ததாரர் தங்கவேல் என்பவர் வங்கியில் இருந்து நூதன முறையில் ரூ. 2 கோடியே, 87 லட்சத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி மோசடி செய்தார். இந்த மோசடி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது வங்கியின் சார்பில் மோசடி செய்யப்பட்ட பணத்தில் இருந்து தங்கவேல், அவரது மனைவி சுப்தரா, நண்பர் சிவமணி உள்ளிட்டோர் பெயரில் கிரயம் செய்யப்பட்ட, ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு வங்கி பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் மற்றும் அதற்கான வட்டி என மொத்தம் ரூ.12 கோடியை தங்கவேல் வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தங்கவேல் வங்கியில் இருந்து ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பினாமிகள் பெயரில் கிரையம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ.25 கோடி முறைகேட்டில் தங்கவேல் பினாமிகள் 18 பேர் உடந்தையாக இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி சார்பில் ஜப்தி செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ரூ.25 கோடி வரை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கூட்டுறவு சார் பதிவாளர் கவுரி என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, அவர், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கியில் இந்த மோசடி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளார். தொடர்ந்து அவர் வங்கியில் உள்ள ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.