நேற்று முன்தினம் சென்னை மதுரவாயில் பகுதியில் சாலையோரம் நடந்துசென்ற இருவரிடம், மர்ம நபர் ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோன்களை பறித்துச்சென்றார். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவம் குறித்து மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டவரைத் தேடிவந்தனர்.
இதனிடையே, நேற்று (04.02.2021) மதுரவாயல் அஷ்டலட்சுமி நகர் போலீஸ் பூத் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனம் ஒட்டிவந்தவரை சோதனை செய்தனர். அவர், செல்ஃபோன் பறிப்பின்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர் வைத்திருந்த பைக்கை ஓட்டிவந்ததும், அதே சட்டை அணிந்து வந்ததும் காவல்துறைக்கு சந்தேகத்தை அளித்தது.
எனவே, அவரை பிடித்துத் தீவிர விசாரனை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர், போரூரைச் சேர்ந்த மோகன் (வயது 32) என்பதும், மதுரவாயல் பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 பேரிடம் செல்ஃபோன் பறித்ததும் தெரியவந்தது.
மேலும், வழக்கமாக ஒரு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் அதன்பிறகு அந்தப் பகுதியில் போலீஸ் கண்காணிப்புக்கு பயந்து மீண்டும் அங்கு செல்லமாட்டார்கள். ஆனால், இவரோ முதல் நாள் அணிந்திருந்த அதே சட்டை, அதே மோட்டார் சைக்கிளில் மறுநாள் அதே இடத்திற்குச் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.