தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி இன்று (18.09.2021) காலை 10:30க்கு ராஜ்பவனில் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாம் மாநிலத்துக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இதனையடுத்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்த் ஆளுநர் ஆர்.என். ரவியை நியமித்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் சென்னை வந்த ஆர்.என். ரவியை, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் வரவேற்றனர். புதிய ஆளுநருக்கு பொன்னாடைப் போர்த்தினார் ஸ்டாலின். ஆளுநர் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணிக்கு ராஜ்பவனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்திருக்கிறது. விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசின் உயரதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என பலரும் கலந்துகொள்கின்றனர்.
கரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் சுமார் 400 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. புதிய ஆளுநராக பொறுப்பேற்கவிருக்கும் ஆர்.என். ரவி, திமுக அரசுக்கு இணக்கமாக செயல்படுவாரா? அல்லது பன்வாரிலால் போல ஆய்வுப் பணிகள் என்ற பெயரில் அரசுக்கு நெருக்கடி தருவாரா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.