சிதம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை தேரடி தெருவில் உள்ள விவசாயச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்தியத் தேசிய காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், ‘விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்’ உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 10 மாதங்களாகப் போராடி வருகின்றனர்.
இதனை ஆதரித்து விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறவும், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்திடவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாகச் செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பு, கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும். செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் தெருமுனை கூட்டங்கள் நடத்திட வேண்டும். அனைத்து பகுதி மக்களின் ஆதரவு கேட்டு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ய வேண்டும். செப்டம்பர் 27 அன்று சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பங்கு பெறச்செய்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பால அறவாழி, இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இளங்கீரன், மக்கள் அதிகாரம் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம் கான்சாகிப் பாசன விவசாயச் சங்கத் தலைவர் கண்ணன், காஜா மைதீன், விவசாயச் சங்கத் தலைவர்கள் குஞ்சிதபாதம், மதிவாணன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.