உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அதன்பின்னர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த 24ஆம் தேதி மசூதிக்கு ஆய்வுக் குழு சென்றடைந்தது. அப்போது ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு குழுவினர் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலியாகினர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று (04.12.2024) செல்ல முயன்றனர்.
இதற்காக டெல்லி - உத்திர பிரதேசம் மாநில எல்லையையொட்டியுள்ள டெல்லி - மீரட் விரைவுச் சாலையில் உள்ள காஜிபூர் எல்லையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராகுல் காந்தி சென்ற கார் மாநில காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக உத்திர பிரதேச அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், “அரசியல் கட்சித் தலைவர்களுக்குச் சம்பல் பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் உண்மை கண்டறியும் குழு மற்றும் சமாஜ்வாதி கட்சியின் குழுக்கள் அங்குச் சென்று ஆய்வு செய்ய முயன்ற போது அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது. அதோடு உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.