விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு எதிரான கருத்துகளை பா.ஜ.க. ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ம.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த காரை செல்வராஜை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் விஸ்வகர்மா திட்டம் குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
விஸ்வகர்மா திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. மாறாக கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் குழு அமைத்து திட்டம் குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சமூக நீதி நிலைநாட்டும் வகையில் கைவினை கலைஞர்களின் மேம்பாட்டுத் திட்டமாக மாற்றி அதன் வழியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக்கிறோம் என்று கூறியிருந்தனர். ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்போம் என்று சொல்லவில்லை. ஆனால், பாரம்பரிய வகையில் செய்கிற தொழிலாக இருக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டும் என்றும் அந்த தொழிலை இப்போது செய்பவர்கள் மேம்பட்டு இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் திட்டமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் பாரம்பரிய தொழில் செய்து வந்ததற்கு சான்றிதழ் கேட்டும் வகையில் இருப்பதால் அதையும் ஆய்வு செய்து வி.ஏ.ஓ.-க்கள் கையெழுத்துகள் மட்டும் போதும் என்ற நிலைக்கு மாற்றி அமைக்கக் கோரி தமிழ்நாடு அரசாங்கம் சொல்லியிருக்கிறது. வானதி சீனிவாசன், நாராயணன் ஆகியோர் இந்த திட்டம் தொடர்பான விஷயத்தில் தமிழ்நாடு அரசு மறுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைப்பதில் துளியும் உண்மையில்லை. தமிழ்நாடு தொழில்துறையில் மேம்பட்டு இருக்கும்போது அவர்களைப் போன்ற ஆட்கள் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மோடி கொண்டுவந்த இந்த விஸ்வகர்மா திட்டத்தில் 18 தொழில்களை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். அதில் 12 தொழில்கள் சாதிய அடிப்படையிலான தொழில்களாக இருக்கிறது. குலகல்வி சிந்தனையும் சாதிய அடிப்படையில் எந்த திட்டம் வந்தாலும் தமிழக அரசு அதை ஏற்றுக்கொள்ளாது. இந்த திட்டத்தில் பாரம்பரியமாக சில சாதிப் பிரிவினர் செய்து வந்த தொழிலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலை மாறுவதற்கு 18 வயது என்று இருந்த வங்கிக் கடன் வாங்கும் வயதை 35 என்று மாற்றியுள்ளது. 18 வயதில் ஒரு இளைஞன் வேலை செய்வதற்குக் கடன் பெற்றால் தொழிலில் ஈடுபட்டு அவனுடைய படிப்பு கெட்டுவிடும். இல்லையென்றால் கடன் விஷயத்தில் பெற்றோர்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள். உண்மையிலேயே ஒன்றிய அரசு கைவினை பொருட்கள் செய்பவர்களை ஊக்கவிக்க நினைத்தால் இப்போது செய்து கொண்டு இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வதுதான் சரியானது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை நோக்கமே மக்களை மதவாத மற்றும் சாதியவாத கட்டுக்குள் வைப்பதுதான். அது இருந்தால்தான் அவர்கள் அரசியல் செய்ய முடியும். முன்னேறி இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அறிவுரையை மத்தியில் ஆட்சி செய்பவர்கள் கேட்டால்தான் பிற மாநிலங்கள் முன்னேற முடியும். 18 வயதுள்ளவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி அவனுடைய கல்வியைப் பறித்து சாதிய சிந்தனையில் குலத் தொழிலைச் செய்ய வைப்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே சாதிய படிநிலையை உருவாக்குவதுதான். ஏன் கோயிலில் மணி அடிக்கும் தொழிலை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரவில்லை அவர்களும்தான் பாரம்பரியமாக அதைச் செய்து வருகிறார்கள். ஒரு திட்டம் வந்தால் அதை நன்கு ஆராயக்கூடியவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் மூலம் மொழியை திணிக்க நினைத்தார்கள். இந்த திட்டம் மக்களை சாதிய படிநிலைக்குள் அடைத்து வைப்பது. இதுதான் அவர்களின் அரசியல் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளது. அந்த வெற்றியைத் தமிழ்நாட்டில் நிச்சயம் பெற முடியாது.