![ni](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZByVweNtUFsMLbt1hQtRTIqnAiDo_BE-U26h4IUUXds/1537619442/sites/default/files/inline-images/nilaani%2010.jpg)
சென்னை ஆலப்பாக்கத்தில் சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 20ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலானி மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் நிலானியின் காதலர் காந்தி லலித்குமார் சென்னை கே.கே.நகரில் நடுரோட்டில் தற்கொலை செய்துகொண்டார். நிலானி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான நிலானி, காந்தி்யின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. அவரை திருமணம் செய்வதாகத்தான் இருந்தேன். ஆனால், மதுப்பழக்கத்தினால் என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டே இருந்தார். இதனால் மனம் வெறுத்து அவரிடம் இருந்து விலகினேன் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, இதையே செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், காந்தியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்பி என் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்குமின்றனர் என்று குமுறினார்.
காந்தி தற்கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிலானி தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது மதுரவாயல் போலீஸ்.