தலைநகர் டெல்லியில், நாளுக்கு நாள் காற்று மாசுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசுபாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுப்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. மோசமான காற்றின் தரத்திற்கு எதிராக தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் நான்காம் நிலையை ஏற்கெனவே ஒன்றிய காற்று மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியிருந்தது.
அதன்படி, கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டு சுரங்கம், சாலை, போரிங், துளையிடும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும், 12ஆம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த காற்று மாசுப்பாடு அபாய கட்டத்தை எட்டிய நிலையில், நேரடி பள்ளி வகுப்புகள் நடத்தக் கூடாது. பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
காற்றின் தரம் தற்போது மேம்பட்ட நிலையில், நேற்று(03-12-24) காற்றின் தரம் 274ஆக பதிவானது. தொடர்ந்து மூன்றாம் நாளாக, டெல்லியில் காற்றின் மாசு குறைந்து காணப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது டெல்லியில் மக்கள் சுவாசிப்பது எளிதாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் வாழ பிடிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாக்பூர் பகுதியில் நிகழ்ச்சியில் ஒன்று நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, “அடிக்கடி இங்கு தொற்று நோயால் பாதிக்கப்படுவதால், நான் தேசிய தலைநகர் டெல்லிக்குச் செல்ல விரும்பவில்லை. எனக்கு டெல்லியில் வாழப் பிடிக்கவில்லை. இங்குள்ள மாசு காரணமாக எனக்கு தொற்று ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும், டெல்லிக்கு வரும்போது, மாசு அளவு அதிகமாக இருப்பதால் போகலாமா? வேண்டாமா? என்று நினைப்பேன்.
மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் படிம எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கலாம். இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகள் வறுமை, பட்டினி மற்றும் வேலையின்மை. எனவே வரும் காலங்களில், பொருளாதாரம் மற்றும் சமூக சமத்துவத்தை அடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.