மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்த அவரை லுக் அவுட் சர்க்குலர் பிறப்பித்துள்ளதாகக் கூறி கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11வது மாஜிஸ்திரேட்டு நீதிபதி முன்பு திருமுருகன் காந்தியை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவு கோரினர். திருமுருகன்காந்தியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, தேவைப்பாட்டால் 24 மணி நேரம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூரில் உள்ள பழைய ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதன்பின்பு, 2017 செப்டம்பர் மாதம் கைதாகி சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் திருமுருகன்காந்தியை கைது செய்வதாக கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்நிலையில் திருமுருகன் காந்தியை சட்டவிரோதமாக கைது செய்யபட்டுள்ளதாகவும், அவரது கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென அவரது தந்தை காந்தி தரப்பில் இன்று ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதிகள் சி.ட்டி.செல்வம், எம்.நிர்மல்குமார் அமர்வில் முறையீட்டார். அதற்கான மனுத்தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான கோரிக்கையை நாளை விசாரிப்பதாக தெரிவித்தனர்.