கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
![Repatriation of confiscated vehicles on curfew ... Bribe Action to Inspector](http://image.nakkheeran.in/cdn/farfuture/jJadFcvGj2qbEGSPNQZc-j5IMPUNEb897qF0ByAC9AM/1587208528/sites/default/files/inline-images/jlkjkl_1.jpg)
காவல்துறை அறிவுரை, அரசின் விழிப்புணர்வை அலட்சியப்படுத்தி 30 சதவித மக்கள் தனித்தில்லாமல் வெளியே வந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். தங்களுக்கெல்லாம் கரோனா தொற்றாது எனச்சொல்லி வெளியே சுற்றினர். அவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்துவிட்டு, அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
அப்படி தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த ஊரடங்கின்போது பதியப்பட்டுள்ளன. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல்நிலையங்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டபின் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என வாகன உரிமையாளர்களுக்கு எப்.ஐ.ஆர் நகல் தந்து அனுப்பிவிட்டனர்.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/q0MBCi5G32vHUssKnHPQjMQyAU4zdClKCjVitLYQC7k/1587209410/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_182.gif)
ஏப்ரல் 14ந்தேதிக்கு பின்னர் மீண்டும் 19 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் இன்னும் பலர் வீட்டில் இருந்து வெளியே வர, அவர்கள் வாகனங்களையும் பறிமுதல் செய்து அதனை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டது. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் என காவல்துறை தலைவர் திரிபாதி, எஸ்.பிக்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என நேரம் ஒதுக்கி வாகனங்களை ஒப்படைக்கும் பணி அந்தந்த காவல்நிலையத்தில் நடந்து வருகிறது. அப்படி வாகனங்களை ஒப்படைக்கும்போது காவல்நிலைய அதிகாரிகள், வாகன உரிமையாளர்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாநகரத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்தில் இப்படி வாகனங்களை ஒப்படைக்க ஆயிரம், இரண்டாயிரம் என பணம் வாங்குவதாக, வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் காமினி ஐ.பி.எஸ்.க்கு புகார் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ஓப்பன் மைக்கில் அந்த காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜை அழைத்து எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் லஞ்சம் வாங்கும் காவலர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆய்வாளர் நாகராஜ் மீது குற்றச்சாட்டுகள் அதிகமானதை தொடர்ந்து, வேலூர் வடக்கு காவல்நிலைய ஆய்வாளரை, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் காவல்நிலைய ஆய்வாளராக, அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் டி.ஐ.ஜி. காமினி. இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.