ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க கோரி தாசில்தரிடம் புகாரளித்து அ.தி.மு.கவினர் பதவி விலகவும் தயாராகி வருகின்றனர்.
சென்னையில் நடந்த காலா திரைபட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது ஆசை என கூறியுள்ளார்.
இது குறித்து, மதுரையில் செய்தியாளர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கருத்து கேட்டபோது, "தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை பிடிக்க முடியாது. ஆனால், காரைக்குடி ஆச்சியை தான் பிடிக்கலாம்" என கூறி கேலியாக சிரித்தார். இதனால் இந்த சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, பேசிய செல்லூர் ராஜூ-வை கண்டிக்கும் விதமாக ஆலங்குடியில் அனைத்து செட்டியார் சமூகத்தினர் ஆலங்குடி சித்திவிநாயகர் ஆலயத்தில் ஒன்று திரண்டு அங்கிருந்து 100-க்கும் மேற்பட்டோர் பைக்கில் ஊர்வலமாக சென்று அமைச்சருக்கு எதிராக கோசமிட்டு ஆலங்குடி தாசில்தாரிடம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
அமைச்சர் மன்னிப்பு கேட்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள செட்டியார் இனத்தினரை திரட்டி புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அ.தி.மு.க வில் உள்ள செட்டியார் சமூகத்தினர் அந்த கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது, அதனால் பலர் தங்கள் பொறுப்புகளை துறக்கவும் தயாராகி வருகின்றனர். இந்த தகவல் அறிந்த யார் யார் பதவியை துறக்க தயாராக உள்ளனர் என்பதை உளவுத் துறையினர் பணக்கெடுத்து சென்னைக்கு அனுப்பி உள்ளனர். மேலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் கே.எம்.சரீப் தனது அறிக்கையில், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ-வை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.