வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வாடகைக்கு இருந்த நபர் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் சென்னை கீழ்பாக்கத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு ஐந்து குடியிருப்புகள் கொண்ட வீடு இருந்தது. அதனை வாடகைக்கு விட்டிருந்தார். வினோத்தும் அதே குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வினோத்தின் இருசக்கர வாகனம் மற்றும் அங்கிருந்தவர்களின் இருசக்கர வாகனங்கள் வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் திடீரென வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக கீழ்ப்பாக்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 இருசக்கர வாகனங்கள் தீயிற்கு இரையானது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது ஒருவர் தீயை வைத்து விட்டு அங்கிருந்து சவகாசமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சி கிடைத்தது.
விசாரித்ததில் அவர் அந்த வீட்டிலேயே குடியிருந்த நடராஜன் என்பது தெரியவந்தது. மனைவி சாந்தியுடன் நான்கு வருடங்களாக வினோத்தின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் நடராஜன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி சாந்தி இறந்துவிட்டார். இதனால் மது அருந்திவிட்டு அங்கு வசிப்போரிடம் நடராஜன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை வீட்டின் உரிமையாளர் வினோத் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நடராஜன் வினோத்தின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற நிலையில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றவர்களின் வாகனமும் பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.