கோவை, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்றால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பொழிந்து வருகிறது. நீலகிரி கூடலூர் பகுதியில் கனமழை காரணமாக காலம்பூழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் புறணவயல் பழங்குடியினர் கிராமம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது.
அதேபோல் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் மேல்பவானியில் 33 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அவலாஞ்சியில் 22 சென்டி மீட்டர் மழையும், ஜி பஜாரில் 20 சென்டி மீட்டர் மழையும், மேல்கூடலூரில் 19, வால்பாறை 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் தேனி, கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.