டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அறுவடை முடிந்துவிட்டதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது குறைந்துள்ளது. நெல் அறுவடை முடிந்துவிட்டதை சாதகமாக்கிக்கொண்ட தனியார் நெல் வியாபாரிகள் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து நெல்லை கொண்டுவந்து விற்பனை செய்யும் அவலம் தொடர்ந்துவருகிறது. இது விவசாயிகளின் காப்பீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் விவசாயிகள்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திருவண்ணாமலை, சேலம் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தரமில்லாத நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி லாரி லாரியாக கொண்டுவந்து இங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவருகின்றனர். இரவு நேரங்களில் லாரிகளில் இருந்து இறக்கிய நெல்லை தூற்றாமல் உடனே சாக்குகளை மாற்றி அட்டியலில் அடுக்குகின்றனர்.
இதுகுறித்து கடைமடை விவசாயி ஒருவர் கூறுகையில், “இதுபோல் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதால் இப்பகுதியில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துவிடுகின்றன. நல்ல விளைச்சல் உள்ள இடங்களில் பயிர் காப்பீடு வழங்குவது குறைக்கப்படுவது வாடிக்கை. இது போன்ற வெளிமாவட்ட நெல் இங்கே விற்கப்படும்போது இப்பகுதி நல்ல விளைச்சல் என குறைத்துவிடுகின்றனர்” என்கிறார்.
பயிர் காப்பீடு குறையும் என்ற காரணத்தை வலியுறுத்தி வெளிமாவட்ட நெல் மூட்டைகளை விற்க இப்பகுதி விவசாயிகள் தடுத்து வந்தனர். இதற்கிடையே நேற்று இரவு 9 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து 356 நெல் மூட்டைகளுடன் நல்லத்துக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குள் நுழைந்த லாரியை அப்பகுதி விவசாயிகள் சிறை பிடித்தனர். அதுமட்டுமின்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி நடவடிக்கை கோரியுள்ளனர்.