காலா படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் வலுத்துவர தமிழகத்திலும் நாடார் மக்கள் சக்தி அமைப்பு இந்த திரைப்படம் வெளியாவதை தடைவிதிக்க வேண்டும் இல்லையெனில் காலா வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் அறிவித்துள்ளனர். 1952-ல் மும்பையில் வாழ்ந்துவந்த தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் திரவிய நாடார். அவருடைய வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காலா படம் உருவானதாக அறிகிறோம். ஆனால் அதில் திரவிய நாடாரின் பெயரை இருட்டடித்து கதையின் நாயகனாக தலித் சமூக தலைவராக மாற்றியிருக்கின்றார் இயக்குனர் பா.ரஞ்சித் என குற்றம்சாட்டியுள்ளனர். இப்படி இருக்க இந்த கதை திரவிய நாடார் பற்றிய கதை என்பதையும் படக்குழு இதுவரை மறுக்கவே இல்லை இதனால் தென்தமிழகத்தில் சாதி பிரச்சனை வரும் எனவே இந்த படத்திற்கு தடை விதிக்குமாறு ஐகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இப்படி இருக்க, அப்படி என்னதான் உள்ளது காலாவிற்கும் நாடார் சங்கங்களுக்கும்,ஏன் நாடார் சங்கங்கள் காலாவை எதிர்க்கின்றன என்று அலசுகிறது பின்வரும் தொகுப்பு.
வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரிடமிருந்து சற்று மாறுபட்டவர் திரவிய நாடார். சின்ன வயதில் வறுமையினால் திருநெல்வேலியில் இருந்து பம்பாய் சென்றது, ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்தது என இவரது தொடக்க காலமும் அவர்களைப் போலவே இருந்தாலும், பின்னாட்களில், அவர்கள் அளவுக்கு பிரபலமான நிழலுலக மனிதராக இவர் திகழவில்லை. மாறாக தாராவி மக்களுக்கு அரணாய் அமைந்து, தமிழ்க் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றையும் காட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து தன் பதினாறு வயதில் சென்னைக்கு சென்று, அங்கு தன் அண்ணன் ஏற்றுக்கொள்ளாததால், ரயிலேறி பம்பாய்க்கு சென்றார். கள்ளச்சாராயத்துக்குத் தேவைப்படும் வெல்லம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வளர்ந்ததால், 'ஃகூடு வாலா சேட்' எனவும் அழைக்கப்பட்டாராம். ஒரு கட்டத்தில் கடத்தலில் இருந்து விலகி, காலியாக இருந்த நிலங்களைக் கைப்பற்றி கடைகள் கட்டியுள்ளார். அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். காமராஜரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துள்ளார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோருடனும் நல்ல உறவில் இருந்துள்ளார்.
'காலா'வில் ரஜினிகாந்தின் தோற்றமும், ட்ரைலரும் கதையைப் பற்றி ரஞ்சித் கூறியிருக்கும் தகவல்களும் இந்த இருவரையுமே நினைவுபடுத்துகின்றன. அதைத் தாண்டி, பாடல்களையும் வசனங்களையும் பார்க்கும்பொழுது, மும்பை டான் என்ற கதையைத் தாண்டி படம் பல அரசியல் பேசும் என்பது உறுதியாகத் தெரிகிறது. அது ரஜினியின் அரசியலா ரஞ்சித்தின் அரசியலா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.