திருவாரூரில் 21 மாதங்களாக வழங்கப்படாத நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் ரூபாய் 9,000 வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும்போது சமையல் அமைப்பாளருக்கு ரூபாய் 5 லட்சம் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கிட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு ஊட்டும் மானியம் ரூபாயை ஐந்தாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.