சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை பணம் பறிக்கும் நோக்கில் கடத்திக் கொலை செய்த நண்பன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாச்சம்பட்டி செலவடையைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு சிவபிரியா (15) என்ற மகளும், தர்ஷன் (12) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு செப்.18ம் தேதியன்று அவசர வேலை இருப்பதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வெளியே சென்ற சக்திவேல், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரேவதி, ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்களின் விவரம், அடையாளம் தெரியாத சடலங்களின் பட்டியல் சேகரித்து காவல்துறையினர் விசாரித்தனர். மேட்டுப்பாளையம் காவல் எல்லையில் 2018ம் ஆண்டு செப். 24ம் தேதியன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணையில், அங்கே சடலமாகக் கிடந்தது சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் சக்திவேல்தான் என்பது தெரிய வந்தது.
அவருடைய செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது, சம்பவத்தன்று சக்திவேலை, ஈரோடைச் சேர்ந்த அவருடைய நண்பர் சீனி என்கிற சீனிவாசன் (42) என்பவர் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் சக்திவேலை கடத்திச்சென்று பணம் பறிக்க முயன்றதும், அவர் பணம் தர மறுத்ததுடன் கத்தி கூச்சல் போட்டதால் சீனிவாசனும் அவருடைய நண்பர்களும் சக்திவேலை சரமாரியாக தாக்கிக் கொலை செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை தீர்த்துக்கட்டிய பிறகு சடலத்தை மேட்டுப்பாளையம் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் புஷ்பராஜ் (38), திருப்பூர் வெங்கடேசன் (48), முருகபாண்டியன் (37) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். சேலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் நான்கு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 2018ல் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கில், காவல்துறையினர் தீவிர புலனாய்வு விசாரணை நடத்தியதன் மூலம் அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.