Skip to main content

“ரவீந்திரநாத்குமாரை தேர்ந்தெடுத்ததற்கு தேனி தொகுதி வருந்தும்!” -முத்தரசன் காட்டம்!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

 

ராஜபாளையத்தில் ஏஐடியுசி விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் பி.எம்.ராமசாமி படத்திறப்பு விழாவில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் இன்று கலந்துகொண்டார். செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது,

 

m

 

“ஒரே நாடு ஒரே கொள்கை என்பது சாத்தியம் இல்லை. அதை செயல்படுத்த மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கையை பா.ஜ.க. முன்னிறுத்தினால்,   பல்வேறு விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். 67 சதவீத இந்திய மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதை மோடி மறந்துவிடக்கூடாது. மத்தியில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மக்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.

 

அமெரிக்காவைப் போல் இந்தியாவையும் கொண்டு வருவதற்கு புதிய தேசிய கல்விக்கொள்கையை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். ராஜாஜி காலத்தில் இருந்ததுபோல், பழைய குலக்கல்வி முறையைக் கொண்டு வர முயற்சிக்கிறது பா.ஜ.க.அரசு. மிகக்குறுகிய மனப்பான்மையோடு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.

 

m

 

இந்தக் கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தால், மூன்றாம் வகுப்பில் ஒரு கல்விக்கொள்கை, எட்டாம் வகுப்பில் ஒரு கல்விக்கொள்கை, 12-ஆம் வகுப்பில் ஒரு கல்விக்கொள்கை, கல்லூரியில் ஒரு கல்விக்கொள்கை எனக் கொண்டுவந்துவிடுவார்கள். அவரவர் பெற்றோர் செய்யும் குலத்தொழிலை பிள்ளைகள் செய்வதற்காக எடுத்திருக்கும் முயற்சி இது. கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு போதுமான அவகாசம் கொடுக்காமல், ஆங்கிலத்திலும் இந்தியிலும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். புதிய கல்விக்கொள்கை அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும். ஆறு மாத கால அவகாசம் தரவேண்டும். 

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தஞ்சை, நாகை போன்ற டெல்டா மாவட்டங்கள், குடிநீர் கூட கிடைக்காமல் பாலைவனமாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இன்றுகூட சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி சார்பில் குடிநீர் பிரச்சனையை எழுப்புவதற்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றனர். என்றைக்கும் இல்லாத அளவில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் ஒருகுடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. ரூ.1500-க்கு விற்கப்பட்ட ஒரு டேங்கர் லாரி குடிநீரை, தற்போது 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஆனாலும், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவில்லை. தமிழக அரசோ, இதையெல்லாம் கவனத்தில் கொள்வதில்லை.

 

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஒரே ஒருவர் மட்டும் பாராளுமன்றம் சென்றிருக்கிறார்.  ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்ற  மோசமான ஒரு கருத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கிறார். அவர் ஆற்றியது கன்னிப்பேச்சு என்பதால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்துக்கு எதிரான ஒரு கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்தற்காக, ரவீந்திரநாத்குமாரைத் தேர்ந்தெடுத்த தேனி தொகுதி மக்கள்தான் வருத்தப்பட வேண்டும்.” என்றார் வேதனையோடு.

 

 

சார்ந்த செய்திகள்