Skip to main content

மோடி ஆட்சியின் கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி பரவாயில்லை: ப.சிதம்பரம்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
pc


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வல்லம்ராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி வரவேற்புரையாற்றினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவர் பேசியதாவது,

காமராஜர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒருபாடம். தற்போது மத்திய ஆட்சியில் 31 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 69 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் இங்கு தற்போது நடக்கிற நிகழ்வுகளை, கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி பரவாயில்லை.

சிறுபாண்மையினர், தலித்துகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் பாரதிய ஜனதா ஆட்சியில் அரங்கேறி வருகின்றன. இந்தியாவில் தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். மோடி ஆட்சியில் இந்தியா விபரீதமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது. நான்கு பேர் தூக்கி கொண்டு போகும் போது தான் என் குரல் நிற்கும். என் பேனா எழுதுவது நிற்கும்.

 

 

கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் வரி பிடித்தம் செய்ததன் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார். இதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா? இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

பயிர் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை வசூலிக்கிறார்களோ, அந்த அளவு இழப்பீடு தர வேண்டும். 2016- 17 ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூபாய் 12 ஆயிரம் கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை 5ஆயிரம் கோடி தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இதுபோன்ற திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வலுவிழந்து உள்ளது. பண மதிப்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதி கெட்டுள்ளது.
  pc


தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் பேசும்போது, பண மதிப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் நிம்மதியின்றி உள்ளனர்.

 

 

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று யோசித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேர் உள்ளனர். இவர்களிடம் கணக்கு கேட்க ஆள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சத்துணவு முட்டை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி நேரு குடும்பம் பதவிக்காக அலைகிறது என்று கூறி வருகிறார். ஆனால் 1989ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் 29 ஆண்டுகளாக இந்த நேரு குடும்பத்தில் யாரும் அரசு பொறுப்புக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருந்தது வல்லரசு நாடுகள் உதவியாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்