கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசுப் பள்ளி மாணவர்கள் மதிய உணவு வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசும் போது, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர். இதில் 2018 ஆம் ஆண்டில் 18 வயதுக்கு குறைவான மாணவர்களின் எண்ணிக்கை 569 ஆக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுவதே ஆகும். 18 வயதிற்கு குறைவாக உள்ள மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மற்றும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து மட்டுமே வாகனத்தை ஓட்டிவர வேண்டும். மேலும் தலைமைஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அதனால் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிவருவதன் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

அவ்வாறு ஏற்படுத்தினால் மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் உறவினர்களிடையே மட்டுமல்லாது சமுதாயத்திலும் ஒரு புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள்.
பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியர்கள் தினமும் நடக்கும் காலை இறைவணக்க கூட்டத்தில் மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பேருந்தில் நின்று பயணம் செய்வதை தவிர்க்குமாறும், பேருந்தின் ஜன்னல் வழியே மேலே ஏறுவதை தவிர்க்குமாறும் சாலையைக் கடக்கும் போது இருபக்கமும் பார்த்து பாதுகாப்பாக கடக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் ஒரே நேரத்தில் வகுப்புகள் முடிந்து வெளியே வரும் பொழுது மாணவர்கள் கூட்டமாக வருவதால் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்கிறார்கள். இதனால் படிக்கட்டில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி பள்ளிக்கு வந்தால் அவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டாம் என்றார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.இராகவன், இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், ஜீவானந்தம், கபிலன் , பள்ளித்துணை ஆய்வாளர்கள் கி.வேலுச்சாமி, வீர.ஜெயராமன் , செல்வம் மற்றும் அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.