Skip to main content

பட்டியல் போட்டு லஞ்சம் வசூல்! கிருஷ்ணகிரி கல்வி அலுவலக ஊழியர் கைது!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 Put the list and collect the bribe! Krishnagiri education office employee arrested

 

 

கிருஷ்ணகிரி அருகே, பணப்பலன்கள் தொடர்பான கோப்புகளை சரிபார்க்க பட்டியல் போட்டு லஞ்ச வேட்டையாடி வந்த வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐடிஐ அருகே வசித்து வந்தவர் ராமையா. கெலமங்கலம் அருகே அனுசோனை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து, ராமையாவின் பணப்பலன்களைப் பெறுவதற்காக அவருடைய மகன் கிஷோர்குமார் (28), கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். நீண்ட காலமாக அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இதனால் அவர், அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி (50) என்பவரை நேரில் சந்தித்து முறையிட்டார்.

 

அப்போது பாலாஜி, தனக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், உடனடியாக பணப்பலன்கள் பெற்றுத்தருவதற்கான வேலைகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு பணம் தருவதாக அப்போது ஒப்புக்கொண்ட கிஷோர்குமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அறிவுறுத்தலின்பேரில் ரசாயன பவுடர் தடப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்று பாலாஜியிடம் ஆக. 12ம் தேதி கொடுத்தார். அந்தப் பணத்தை பாலாஜி கையில் வாங்கும்போது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

 Put the list and collect the bribe! Krishnagiri education office employee arrested


கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலாஜி மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புப்பிரிவுக்கு தொடர்ந்து ஊழல் புகார்கள் சென்றன. தற்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற்றுத்தருதல், வாரிசு வேலைக்கான கோப்புகளை தயார் செய்தல், மருத்துவ விடுப்பு ஆவணங்களை சரி செய்தல் என ஒவ்வொரு பணிக்கும் சேவைக்கட்டணம் போல் பட்டியல் போட்டு பாலாஜி லஞ்சம் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

 

லஞ்சப்பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு போகிறது? என்பது குறித்து விசாரித்தனர். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சிறையில் நீடிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்