புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கும்படி உத்தரவிடக் கோரிய ஏழு மாணவிகளின் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், தலா 55 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்பட்டன.
இதுகுறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்தக் கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு மாணவிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில், 2006- ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை விதிகளின்படி, தனியார் மருத்துவக்கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இடங்களை வழங்க மறுத்துள்ளதாகவும், அதனால் 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. ஆனால், 2006- ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என்று கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘மணக்குள விநாயகர் மற்றும் புதுச்சேரி மருத்துவ கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அத்தியாவசிய சான்று பெறும்போது, அரசுடனான ஒப்பந்தத்தில் 50 சதவீத இடங்களை வழங்குவதாக எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை. 50 சதவீத இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்ட வெங்கடேஷ்வரா கல்வி நிறுவனமும், 2015- ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 53 இடங்களை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக முடிவுக்கு வர எவ்வித ஆதாரமும் இல்லை. 2006- ஆம் ஆண்டு விதிகளில் கூட ‘50 சதவீத இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யலாம்‘ என்று கூறியுள்ளதன் மூலம், ஒதுக்கீடு குறித்த முடிவு, சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முடிவிற்கே விடப்பட்டுள்ளது.’ எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.