திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று காலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய சென்றார். சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்ட கவர்னரின் கான்வாய் திருவானைக்காவல் டிரங்ரோடு வழியாக கொள்ளிடம் பாலம் அருகே உள்ள ‘Y’ரோடு ஜங்ஷன் வந்த சேர்ந்தது.
இதன் காரணமாக கொள்ளிடம் பாலத்தில் திருச்சியை நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கான்வாய் ‘Y’ரோடு பகுதியை கடந்து திருச்சி –சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்றது. கான்வாய் கடந்து சென்ற சில மணித்துளிகளிலேயே பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உடனே செல்வதற்கு அனுமதிக்கபட்டது. அதனால் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சீறிப்பாய்ந்தது சென்றன.
அவ்வாறு சென்ற வாகனங்கள் கவர்னரின் கான்வாயை கடந்து செல்ல தொடங்கியது. இதனை கண்ட கான்வாய் பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை கண்டித்தார்.