கரோனா தொற்று பரவலை தடுக்கும்விதமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிவழங்கப்பட்டது. கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதை கருத்தில்கொண்டு உறையூரில் இயங்கிவந்த மொத்த மீன் மார்க்கெட் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் என்றும், இதில் மொத்த வியாபாரம் மட்டும் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த மீன்மார்க்கெட் கடந்த 7ம்தேதிமுதல் செயல்பட தொடங்கியது.
மீன்பிடி தடைக்காலம் 15ம்தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சிக்கு கடல் மீன்கள் வரத்து அதிகரித்து இருந்த நிலையில், மொத்த வியாபாரிகளும் மீன்களை வாங்கிச்சென்றனர்.
அதேநேரம் கரோனா பரவல் அச்சம்காரணமாக சில்லறை விற்பனை தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் மீன்வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டதால் அசைவ மற்றும் மீன்பிரியர்கள் கரோனா அச்சத்தையும் மறந்து தற்காலிக மீன் சந்தையில் மீன்களை வாங்குவதற்காக குவிந்தனர்.
திருச்சியில் தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மக்கள் தாங்களாக சுயகட்டுப்பாடுடன் இருக்காவிட்டால் மீண்டும் திருச்சியில் கரோனா பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.