புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. உயர்த்தி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை பூட்டி, நுழைவு வாயிலில் அமர்ந்து தீப்பந்தம், ராந்தல் விளக்கை ஏந்தியும், அம்மிக் கல்லில் சட்னி அரைத்தும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை உடைத்தும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
“புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மக்களுக்கு பரிசாக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது காங்கிரஸ்” என குற்றம் சாட்டிய சாமிநாதன் ‘உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்’ என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.