Skip to main content

ஒகேனக்கலில் தடை; செஞ்சுரிக்கு காத்திருக்கும் மேட்டூர் அணை

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
nn

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 'தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்' எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு 84,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு 83 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் எனவும், இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் வெள்ளை அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் கடிதம் வாயிலாக இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 58,973 கன அடியிலிருந்து 68,032 கனஅடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக நீர் திறப்பு வினாடிக்கு ஆயிரம் கன அடியாக உள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 93.32 அடியில் இருந்து 94.23 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 57.62 டிஎம்சி ஆக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளை 100 அடியை தொடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியில் திறந்து விடப்பட்ட நீரால் கடந்த 10 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

சார்ந்த செய்திகள்