
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த வீராரெட்டி குப்பத்தில் ‘அமலா சிறுவர், சிறுமியர் காப்பகம்’ என்ற தனியார் சீர்திருத்தப் பள்ளியை நடத்திவருபவர் சவரிமுத்து மகன் ஜேசுதாஸ்ராஜா (65).
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு காப்பகத்திலிருந்து, மூன்று பெண் குழந்தைகளை வீராரெட்டி குப்பத்தில் உள்ள ஜேசுதாஸ்ராஜா நடத்தும் தனியார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் பயில்வதற்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மூன்று சிறுமிகள் காணாமல் போனதாகக் கூறி அப்பள்ளியின் தாளாளர் ஆலடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காப்பகத்தில் தங்கியிருந்த மூன்று சிறுமிகளையும் கண்டுபிடித்து, விசாரணை செய்தனர். விசாரனையில் பள்ளியின் தாளாளர், தங்கள்மீது பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமிகள் கூறியதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜாவை ஆலடி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி தலைமையில் தீவிர விசாரணை செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர்.