Skip to main content

தப்பி ஓடிய கைதி! இரண்டு மணி நேரத்தில் பிடித்த காவல்துறை! 

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

 prisoner Escaped Police caught in two hours!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் உள்ள வடதரசாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(35). இவரது இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நிசார் அகமது(40) என்பவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக நிசார் அகமதுவை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தியாகதுருகம் காவல் நிலைய போலீசார் ராஜா, ராதாகிருஷ்ணன், ஆனந்த் ஆகிய மூவரும் அழைத்து வந்தனர். 

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காத்திருந்தபோது மாலை சுமார் ஐந்து மணி அளவில் விசாரணை கைதி நிசார் அகமது கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதையடுத்து, போலீசார் அதே வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கழிவறைக்கு சென்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். 


கைதி நீண்ட நேரமாக கழிவறையில் இருந்து வெளியே வராததால் காவலர்கள் கழிவறைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கைதி தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி ஆகியோருக்கு போலீசார் தகவல் அளித்தனர். உடனடியாக எஸ்.பி உத்தரவின் பேரில் தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் தப்பி சென்ற விசாரணை கைதியை பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் இரவு 7 மணி அளவில் ஒரு பேருந்தில் இருந்து நிசார் அகமது கீழே இறங்கிய போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஆஜர் படுத்தினர். தப்பி ஓடிய கைதியை இரண்டு மணி நேரத்தில் தேடிப்பிடித்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி செல்வகுமார் பாராட்டு தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்