சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட போத்தீஸ் ஜவுளிக்கடை முன்பு இருந்த புங்கன் மரங்கள், சட்ட விரோதமாக வெட்டி அகற்றப்பட்டது குறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மானுஷ், இயற்கை வளங்களை காப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல்களுக்கு எதிராகவும் தீவிரமாக களமாடி வருகிறார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஏற்காடு பிரதான சாலையில் இருந்த நூறாண்டுகள் பழமையான புளிய மரங்கள் அனைத்தும், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டி அகற்றப்பட்டன. அப்போது மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக கடுமையாக போராடி வந்தார். தொடர்ந்து அவர் இயற்கை வளங்களைக் காக்கும் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலம் ஓமலூர் பிரதான சாலையில் கடந்த 20.5.2018ம் தேதி, போத்தீஸ் நிறுவனத்தின் புதிய ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையின் முகப்பில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பல ஆண்டுகள் வயதான புங்கன் மரங்கள் இருந்தன. அந்த மரத்தின் அடியில் வாகன ஓட்டிகள் நிழலுக்காக ஒதுங்குவர். சில தள்ளுவண்டிக் கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் அந்த நிழலை பயன்படுத்தி வந்தனர்.
மரங்கள் இருப்பதால் ஜவுளிக்கடையின் முகப்பை மக்கள் பார்ப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய அந்நிறுவனம், திடீரென்று அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பியூஷ் மானுஷ் மற்றும் அவருடைய குழுவினர், நேற்று போத்தீஸ் நிறுவன ஊழியர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள், தாங்கள் அந்த மரங்களை வெட்டவில்லை என்றும், நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றியதாகவும் மழுப்பலாக பதில் அளித்தனர்.
பின்னர் பியூஷ் மானுஷ் குழுவினர், போத்தீஸ் வாயில் அருகில் புதிதாக ஐந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதுகுறித்து பியூஷ் மானுஷ் கூறுகையில், ''போத்தீஸ் நிறுவனம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும்போது, முன்பக்கத்தில் நீல நிறத்தில் திரை போட்டு மறைத்துவிட்டு, அங்கிருந்த மரங்கள் எல்லாவற்றையும் வெட்டி அகற்றிவிட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு மரத்தை வெட்டி அகற்றியதாக தகவல் கிடைத்தது.
இங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினால், 'நாங்கள் மரத்தை வெட்டவே இல்லை. நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி விட்டனர்,' என்று பொய் சொன்னார்கள். கூகுள் மேப் மூலம் போத்தீஸ் நிறுவனத்தின் முன்பு மரங்கள் இருந்ததை உறுதி செய்தோம். ஏற்கனவே, ஏற்காடு சாலையில் மரங்களை வெட்டிய சம்பவம் பெரும் பிரச்னை ஆகியது. அதிலிருந்து எந்த மரத்தை வெட்டுவதாக இருந்தாலும் ஆர்டிஓ அனுமதியின்றி வெட்ட முடியாது.
மரங்களை வெட்டி வீழ்த்திய போத்தீஸ் நிறுவனம் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக புகார் அளித்திருக்கிறோம். தாசில்தார், விஏஓ ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் நாங்கள் இப்போது புதிதாக 5 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.
இந்த புகார் குறித்து சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
டெயில் பீஸ்:
ஆண்டுதோறும் மே மாதங்களில் ஜவுளி வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்களுக்கு போத்தீஸ் நிறுவனம், பசுமைக் கொண்டாட்டம் என்ற பெயரில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால், சேலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டு பசுமைக் கொண்டாட்டம் நடத்துவது ஆகப்பெரிய முரணாக உள்ளது.