திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டூ சேத்பட் சாலையிலுள்ள கங்கைசூடாமணி கிராமத்திலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நான்குவயது சிறுமி யூ.கே.ஜீ படித்துவருகிறார். இவர், கடந்த ஜுன் 30ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பியபோது, வயிறு வலி என அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குழந்தை உடல்நிலை சரியான பின் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். பள்ளிக்கு சென்ற அன்றே மீண்டும் குழந்தை வயிறு வலி என அழுதுகொண்டு வீடு திரும்பியிருக்கிறாள். இதனால் அச்சமடைந்த பெற்றோர், மீண்டும் சேத்பட்டிலேயே ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போதும் வயிறு வலி சரியாகாததால் வயிற்றில் கட்டி இருக்கிறதோ என நினைத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையிடம் பாலியல் ரீதியாக முயற்சி செய்துள்ளார்கள் என பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சியாகியுள்ளனர். இதனை சைல்ட் ஃலைன் அமைப்புக்கு தகவல் சொல்லியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். அவர்கள் வந்து குழந்தையிடம் உரையாட துவங்கியுள்ளார்கள். பள்ளியில் தனக்கு சாக்லேட் தந்து ஒருவர் அழைத்து சென்றார் என குழந்தை சொல்லியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இது குறித்தான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் வந்துள்ளது. போளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். போளுர் மற்றும் சேத்பட் போலீஸார் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் பணியாற்றுபவர்கள் சிலரின் புகைப்படத்தை குழந்தையிடம் காட்டியபோது ஒருவரை அடையாளம் காட்டியுள்ளது.
அவர் அந்த பள்ளி தாளாளரின் கணவர் 51 வயதான காமராஜ் என்பது தெரியவந்தது. மேலும், உலகம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக உள்ளார் காமராஜ். தினமும் சிலமணி நேரம் பள்ளியில் இருந்துவிட்டு மற்ற நேரங்களில் தனது சொந்த பள்ளிக்கு சென்று நிர்வாகம் செய்துவந்துள்ளார். அவர்தான் மிகமிக மோசமான இந்த செயலை செய்துள்ளார்.
சம்மந்தப்பட்ட காமராஜ் எங்கே என தேடியபோது, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிருக்கிறார் எனச் சொல்லியுள்ளனர். உடனே அவரது மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்தனர். சுவாமியை வணங்கிவிட்டு காரில் திரும்பிவந்து கொண்டிருந்தவரை எட்டையபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸார் மடக்கி கைது செய்தனர். அந்த ஆசிரியருக்கு பலவிதங்களில் உடந்தையாக இருந்த அதேபள்ளியில் பணியாற்றும் 51 வயது கார்த்தீபனையும் கைது செய்துள்ளது போலீஸ். இவர்கள் இருவரும் இணைந்து வேறு என்னென்ன செய்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்கத் துவங்கியுள்ளது காவல்துறை.