தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லும் மக்களை மட்டுமே போலீசார் அனுமதிக்கின்றனர். ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி ஊர் சுற்றுகிற இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நேற்று (25.05.2021) கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீசார் கடலூர் அண்ணா பாலம் அருகே தீவிர வாகன சோதனைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரம் சாலையிலிருந்து ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த தம்பதியினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த தம்பதிகள் தாங்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் காரில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி பட்டுப்புடவை கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்துகொண்டு ஆடம்பரமாக காரில் அமர்ந்திருந்தார்.
இதைக் கண்டு சந்தேகமடைந்த மாவட்ட எஸ்பி அவர்கள் சிதம்பரத்தில் நிறைய மருத்துவமனைகள் இருக்கும்போது இவ்வளவு தூரம் மருத்துவமனைக்கு வர வேண்டுமா? என்று அறிவுறுத்தியதோடு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் காரில் வருவது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ளார். உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்தத் தம்பதியினரை அதில் ஏற்றி அவர்கள் செல்லப் போவதாகக் கூறிய மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார்.
இதைக் கண்டு பதறிப்போன அந்த தம்பதியினர், “நாங்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை சொந்த வேலையாக புறப்பட்டு வந்தோம். தங்களிடம் பொய் கூறிவிட்டோம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, எச்சரிக்கை செய்தும் அனுப்பிவைத்துள்ளனர். தேவையில்லாமல் இதுபோன்று இனி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். முழு ஊரடங்கு காலத்தில் இதுபோன்று தேவையில்லாமல், உரிய காரணங்கள் இல்லாமல் வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர் அபிநவ்.