கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பல ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வருகிறது. சில சமயங்களில் தமிழக எல்லையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளை தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
தொடர் கதையாகி வரும் இந்த சம்பவங்கள் குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சில நாட்களாகவே தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் புறநகர்ப் பகுதியாக இருக்கக்கூடிய கொண்டாநகரம், சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நடுக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் டன் கணக்கில் கட்டப்பட்டு வருவது தொடர்பாக சுத்தமல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகரன் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டுவதற்கு முக்கிய தலைமை ஏஜெண்டாக இவர்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக பெருமளவில் பணம் பெற்றுக் கொண்டு இதற்கு உறுதுணையாக செயல்பட்டது தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் தமிழக-கேரள எல்லைகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகளும் நீடித்து வருகிறது.