திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மத்திய இணையமைச்சர் எல். முருகனின் ஜாதியை குறிப்பிட்டு டி.ஆர். பாலு பேசவில்லை. அமைச்சரான அவரின் செயல்பாடுகள் குறித்துதான் டி.ஆர். பாலு பேசினார். எல். முருகன் இணை அமைச்சராக இருந்தபோதும் அவர் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி கூடப் பெற்றுத் தரவில்லை அதையெல்லாம் வைத்து தான் டி.ஆர். பாலு அவ்வாறு பேசினார். ஆனால் அதனை ஜாதி ரீதியாக திரித்துப் பரப்புவது ஆர்.எஸ்.எஸ் எப்பொழுதும் செய்யும் யுக்தி. பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலைக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.