ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை மருத்துவக் கல்லூரி, போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த மருத்துவக் கல்லூரி கடந்த 2018- ஆம் ஆண்டு சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே (எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு ரூபாய் 3.85 லட்சம்) வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிக்குரிய மருத்துவக் கட்டணங்களை மட்டும் வசூலிக்கக் கோரி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசுக் கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூபாய் 13,610 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து, ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் அரசுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.