
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது, “தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாக்கடை குழிகளில் மழை நீர் தேங்காதவாறு எந்திரங்கள் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 2042 கி.மீ தூர்வாரும் பணிகள் நடைபெற்றதால் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. அவசர தேவைகளுக்காக ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.