கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் இரயில்வே சார்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி பல்வேறு தரப்பினரிடம் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் மற்றும் தென்மேற்கு ரயில்வே பொறியாளர் ஷியாம் சிங் ஆகியோர் இன்று அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி எம்பி தெரிவிக்கையில்; ரயில்வே துறையில் மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாக மாற்றப்பட்டதிலிருந்து ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கேட் எண்கள் 102 மற்றும் 103 மூடப்பட்ட காரணத்தினால், பாரதிதாசன் நகர், கோகுல் நகர் பசுமைத்தாயகம் நகர் மற்றும் ஜனகபுரி லே-அவுட் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ரயில் பாதையை ஆபத்தான வகையில் கடந்து செல்லும் நிலையில் இருப்பதால் நீண்ட நாட்களாக ரயில்வே துறையிடம் முறையிட்டு வந்தனர்.
எனவே இது சம்பந்தமாக தென்மேற்கு ரயில்வே கோட்ட பொறியாளர் ஷியாம் சிங் என்பவரை பலமுறை சந்தித்து அவரிடம் தெரிவித்தும், ரயில்வே அமைச்சரிடம் இதுகுறித்து எடுத்துரைத்து இருந்த போதிலும், பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக பேசிய பொழுதும் அதிகாரிகள் எனக்கு கடிதம் எழுதினார்கள். இதனை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களை நேரில் அழைத்து நானும் சென்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு எடுத்து கூறினேன்.
அவர்களும் நேரில் இதனைப் பார்வையிட்டு, அந்தப் பகுதியில் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் கட்டுவதற்கு மாநில அரசு ஒப்புதலுக்காக அனுப்புமேயானால் ஒரு வாரத்திற்குள் நாங்கள் அனுமதி அளிக்க தயாராக இருக்கிறோம். என ரயில்வே அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அதேபோல ஓசூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப் பாதையில் மழைக் காலங்களில் அரை மணி நேர மழைகே தண்ணீர் நிரம்பி பாதை துண்டிக்கப்பட்டு விடுகிறது. இந்த சூழ்நிலையை பொறியாளர் நேரில் வந்து என்னுடன் பார்வையிட்டு, 60 அடி சாலைக்கு 20 அடி அளவு பாலம் இருப்பதால் நிச்சயமாக அதை விரிவுபடுத்த வேண்டும் என்பதனை அவர் ஒப்புக்கொண்டார். எனவே இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை விரிவு படுத்துவதற்கான அனுமதியை எங்களிடம் கேட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒப்புக்கொண்டு உள்ளார்.
அதேபோல அன்னை நகர் பகுதியில் சுரங்கப் பாதை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி கூறினால் உடனே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மிகவும் அவசியமானது, அவசரமும் ஆனது. ஆகையால் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமேயானால் நாங்கள் உடனே முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்திருக்கிறார். கரோனா காலங்களில் எல்லா ரயில்களும் ரத்து செய்யப்பட்ட பொழுது ஓசூர் பகுதி மக்கள் நெடு நாட்களாக பயன்படுத்தி வந்த ஓசூர் -பெங்களூர்- எஸ்வந்த்பூர் மற்றும் ஓசூர் வழியாக செல்லும் பெங்களூர்- காரைக்கால் ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்த நிலையில் தற்பொழுது எல்லா ரயில்களும் முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில், நிறுத்தப்பட்ட அந்த இரண்டு ரயில்களும் என்ன காரணத்திற்காக தற்பொழுது வரை இயக்கப்படவில்லை என்பதை ரயில்வே துறையில் சார்பில் முழுமையாக ஆய்வு செய்து தெரிந்து கொண்டு, பிறகு அவைகளை மீண்டும் இயக்குவதற்கு உண்டான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பொறியாளர் உறுதி அளித்திருக்கிறார்.
மேலும் ஓசூர் ரயில் நிலையத்தை பொருத்தமட்டில் ஏராளமான முதியவர்களும் ரயில் பாதையை கடப்பதற்கு நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இதற்கு அவர்களுக்காக பிரத்தியேகமாக லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக உரிய ரயில்வே அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்து அதற்கான நடவடிக்கைகளுக்கு உறுதியையும் அங்கேயே என்னிடம் அளித்தார். ரயில் நிலையத்தில், காவலர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு போதிய ஓய்வு அறையோ அல்லது கழிப்பிட வசதியோ இல்லை என வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் அவர் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதே போல 14வது கேட் என்று அழைக்கக்கூடிய பெரிய நாகதோனை பகுதியிலிருந்து பொதுமக்கள் அன்றாடம் பள்ளிக்குச் செல்வதற்கு மற்றும் விவசாயிகள் கால்நடைகளை அழைத்து சென்று வருவதற்கும் ரயில் பாதையை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டிய நிலையே நீடித்து வருகிறது. எனவே அங்கும் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான அனுமதி வேண்டும் என ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை வைத்ததற்கு, மாநில அரசு அதற்கான ஒப்புதல் கடிதம் வழங்குமேயானால் அதற்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்து இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்