“வரும் தேர்தலில், 15 சதவீதம் வாக்காளர்கள், ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதில், ஹிந்து ஓட்டு வங்கி ஏற்படுத்தும் தாக்கத்தை தெரிந்துகொள்ள முடியும்’’ என்று தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் கோபால்ஜீ தெரிவித்தார்.
திருச்சியில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநிலப் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்ற தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் கோபால்ஜீ கூறியதாவது; “தமிழகத்தில், இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலைதுாக்கி வருகிறது. என்.ஐ.ஏ., சார்பில், பல இடங்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் நடக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. போலீசார் அலட்சியமாக இருக்காமல், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும், மதக் கலவரங்களும், ஜாதிக் கலவரங்களும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
தமிழகத்தில், ஹிந்து ஓட்டு வங்கி உருவாகி வருகிறது. இந்தத் தேர்தலில், ஹிந்து விரோத சக்திகளுக்கு, ஹிந்து ஓட்டு வங்கியால் பாதிப்பு இருக்கும். அதனால், சில அரசியல் கட்சியினர், ‘ஹிந்து விரோதிகள் அல்ல; ஆதரவாளர்கள்’ என்று பேசி வருகின்றனர். கடந்த காலங்களில், அரசியல் கட்சியினர் தேர்தலை நடத்தினர். தற்போது, மார்க்கெட்டிங் ஏஜென்சியினர், தேர்தலை நடத்துகின்றனர். இரண்டு பெரிய அரசியல் கட்சிகளின் ஏஜென்சிகள் கணக்கெடுப்பு நடத்தியதில், ‘ஹிந்துக்கள் மனம் புண்படும்படி யார் பேசினாலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளனர்.
திராவிடக் கட்சிகள், தமிழகத்தில் ஜாதி அரசியலை வளர்த்துவிட்டு, ஹிந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வந்தனர். அவற்றைக் கடந்து தமிழகத்தில் ஆன்மீக எழுச்சியும், ஹிந்து ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது. அந்த ஒற்றுமை நல்ல ஒரு தொடக்கம். வேல் யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூட, வேலை கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிந்து சமுதாயத்துக்கு சொந்தமான சொத்துக்கள் கோவில்கள் பெயரில் எழுதி வைக்கப்பட்டது. ஹிந்து அறநிலையத் துறை மூலமாக, அந்த சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளது. அதில் கிடைக்கும் வருமானத்தை, ஏழை மக்களின், கல்விக்கோ மருத்துவத்துக்கோ பயன்படுத்தவில்லை.
தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட பெரும் கோவில்களில் இருந்து, காணாமல் போன பொக்கிஷங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்களுக்கு கண்காணிப்பாளராக இருந்து, திருட்டு போகாமல் பாதுகாக்க வேண்டிய அரசு, கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்.
மதசார்பற்ற அரசு என்பது, மதம் சார்ந்த நிறுவனத்தை நிர்வகிக்கக் கூடாது. ஹிந்து கோவில்களின் வருமானம், ஹிந்து சமுதாயத்தினருக்குத்தான் சென்றடைய வேண்டும்; அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும். தனித்தியங்கும் வாரியமாக இருக்க வேண்டுமே தவிர, அரசு கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது.
ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஜாதி, மதம் இல்லை. ஜாதி, மதம் பார்க்காமல், ஏழை மாணவர்கள் அனைவருக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும். ஓட்டல்களில் விற்பனை செய்யும் உணவிலும், மதம் திணிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த ‘ஹலால்’ என்ற வார்த்தையை ஓட்டல்களின் விளம்பர பலகையில் எழுதி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஓட்டல்களின் விளம்பர பலகையில் ஹலால் என்று எழுதியதை அகற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பான கட்சியாக யாரும் இல்லை. பா.ஜ.கவும் மதசார்பற்ற கட்சியாகத்தான் உள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒப்பிட்டால், பா.ஜ.க. கட்சி ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படவில்லை.
ஆன்மீகத்தை மிக எளிமையாக சொல்லி, புரிய வைத்தவர் கிருபானந்த வாரியார். அரசு சார்பில், அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை, நீண்ட காலம் கடந்து செய்துள்ளனர். கடந்த தேர்தலில், ஒரு சதவீதம் ஓட்டு வித்தியாசத்தில்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. விஷ்வ ஹிந்து பரிசத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு பேரவை, பூக்கட்டுவோர் பேரவை போன்றவற்றில் 15 சதவீத வாக்காளர்கள் உள்ளனர்.
அந்த, 15 சதவீதம் வாக்காளர்கள் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். ஹிந்து ஓட்டு வங்கி ஏற்படுத்தும் தாக்கத்தை, வரும் தேர்தலில் தெரிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், கோடிக்கணக்கான சதுர அடி இடத்தில் வீடுகளாகவும், கடைகளாகவும் கட்டடங்களாகவும் ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ளது.
விவசாய நிலத்துக்கான குத்தகைதாரர் சட்டத்தை நீட்டிப்பு செய்து, கடைகளுக்கான வாடகை நிர்ணயச் சட்டத்தில் இருந்து விலக்க வேண்டும். இதன் மூலம், போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்வதையும், ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்க முடியும். இது தொடர்பான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள், வருவாய் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு, சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, நிலுவை வழக்குகளை முடிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.